அரசாங்கத்தின் உன்னத முடிவு: சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சமின்றி மெட் ரிகுலேஷனில் இடம்

இனி நம் நாட்டுக்குத் தலைவராக வரப்போகும் நம் பிள்ளைகள் போற்றத்தக்க பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என வலியுறுத்திய நம் பிரதமர் இனி எந்த இனம் என பாராமல் எஸ்.பி.எம் தேர்வில் 10 அல்லது அதற்கும் மேல் ஏக்கள் பெறும் மாணவர்களுக்கு கண்டிப்பாக மெட்ரிகுலேஷனில் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
நம் இந்திய சமுதாயத்தைப் பொருத்தமட்டில் இது மிக சிறந்த அறிவிப்பாகக் கருதலாம். கடந்த காலங்களில் நம் மாணவர்கள் மெட்ரிகுலேஷனில் கல்வி பயிலும் வாய்புக்காக பல சிரமங்களை கடந்து வர வேண்டிய சூழல் இருந்து வந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சிறந்த தேர்ச்சி பெற்றும் அவ்வாய்ப்பு கிடைக்காமல் போன மாணவர்கள் பலருக்கு மேல் முறையீடு செய்து சில வாய்ப்புகளைப் பெற்று தந்திருக்கிறோம். ஆனால் இனி அதற்குத் தேவையில்லை. ஏனெனில் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மலாய்க்காரர், சீனர், இந்தியர்கள் மற்றும் சபா சரவாக்கைச் சார்ந்த அனைத்து இனக்குழுக்களையும் சேர்ந்த மாணவர்கள் நம் மாணவர்கள். நம் மாணவர்கள் யாவரும் சிறந்த கல்வி பயிலவும் அவர்களுக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்படக் கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியிருப்பதானது, இன வாரியாக அல்லாமல் தேவைப்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்களின் நலம் காக்கப்படும் எனும் மடானி அரசாங்கத்தில் கொள்கை இந்த முன்னெடுப்பில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது என பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் அவர்கள் தெளிவுறுத்தினார்.
இந்த அறிவிப்பு நம் பெற்றோர்கள் பலருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தகவலாக அமைந்திருக்கும். கடும் முயற்சி செய்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி சிறப்பான முடிவுகளைப் பெற்றும் தங்கள் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பிற்காக இனி பெற்றோர்கள் போராட தேவையில்லை என்பது மிகவும் ஆறுதலான சூழலாகும். இந்த மெட்ரிகுலேஷனில் கல்வி வாய்ப்பு குறித்து கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் கல்வி அமைச்சைத் தொடர்புகொண்டு சரியான தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர், உயர்கல்வி அமைச்சருடனும் கலந்தாலோசித்த பின்னர் விரைவில் இது குறித்து முழுமையான தகவல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles