
கோல பெர்லிஸ், ஜூலை 15- கெடா மாநிலத்தின் கூலிமில் எலி மருந்து கலக்கப்பட்ட கெரோப்போக் திண்பண்டத்தை உட்கொண்டதால் இரு சிறார்கள் உயிரிழந்த விவகாரம் அத்தகைய விஷப் பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மீதான சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார அமைச்சுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அத்தகைய விஷப் பொருள்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சுக்கு குறிப்பாக அமலாக்கத் தரப்பினருக்கு இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
அத்தகைய விஷப் பொருள்களின் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான எஸ்.ஓ.பி. நடைமுறைகளை அல்லது விதிமுறைகளை நாம் எவ்வாறு கடுமையாக்கப் போகிறோம் என்பதை சுகாதார அமைச்சின் அமலாக்கத் துறையினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக இந்த சம்பவம் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

