மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு பி.இராமன் தலைவர்! ஆலய நிர்வாகத்தை வழிநடத்த நீதிமன்றம் உத்தரவு

.

தெமர்லோ, ஆக 6-
மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தை பி. இராமன் தொடர்ந்து வழிநடத்த தெமர்லோ உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி வழங்கியதாக அவரின் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

மேலும் மாரான் மரத்தாண்டவர் ஆலய தலைவர் தேர்தலை நடத்திய ஐந்து அதிகாரிகளில் இருவரான டத்தோ தேவேந்திரன் மற்றும் டத்தோ புஷ்பா நாதன் (எம்.பி.நாதன்) ஆகியோர் பி.இராமன் வெற்றி பெற்றது செல்லும் என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

முன்னாள் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் மற்றும் அவரின் தரப்பினர் மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்றும் நீதிபதி ரோஸ்லான் பின் மாட் நோர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி மாரான் மரத்தாண்டவர் ஆலய தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது . தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இராமனுக்கு 250 வாக்குகள் கிடைத்தன. டத்தோ தமிழ்ச் செல்வத்திற்கு 206 வாக்குகள் கிடைத்தன. ஐந்து செல்லாத வாக்குகள்.

ஆனால் கள்ள வாக்குகள் போட்டு விட்டார்கள் என கூறி தேர்தல் முடிவை அறிவிக்க மறுத்து விட்டார்கள். மறுநாள் ஜூன் 24 ஆம் தேதி குவாந்தான் ஆர்ஓஎஸ் அலுவலகத்தில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போது இராமனுக்கு 250 வாக்குகளும் தமிழ் செல்வத்திற்கு 204 வாக்குகளும் கிடைத்தன.

ஆனால் தேர்தல் அதிகாரி சுப்ரமணியம், டத்தோ எம்.பி. நாதன், டத்தோ தேவேந்திரன், தர்மா, ஹரிக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் முடிவை அறிவிக்காததால் தமது வெற்றியை உறுதிப்படுத்த கோரி தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் இராமன் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமன் தொடுத்த வழக்கு இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி தெமர்லோ உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இராமன் சார்பில் வழக்கறிஞர்கள் செல்வம் சண்முகம், செல்வமேரி, குணசீலன் ஆகியோர் ஆஜராகினர்.

இதனிடையே நீதிமன்ற ஆணைக்கு இணங்க மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் இதர பதவிகளுக்கு இராமன் தலைமையில் தேர்தல் நடத்தப்படும் என்று வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles