
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஆக 29
நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள ஏதுவாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனிடம் கோரிக்கை முன் வைக்கப்படும் என்று மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒரு தொழிலாளி சொந்த ஊருக்கு திரும்பி விட்டால் அவருக்கு பதிலாக மாற்று தொழிலாளி வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி முன் வைத்திருக்கும் கோரிக்கை நியாயமானது.
தற்போது எந்த ஒரு தொழில் துறையும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
இருப்பினும் இந்திய உணவகங்களுக்கு மாற்றுத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுவதால் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனிடம் கோரிக்கை வைப்பேன் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் ஊடகவியலாளரிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா. இராமலிங்கம், பிரிமாஸ் முன்னாள் தலைவர் முத்துசாமி, டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் மற்றும் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

