
புத்ரா ஜெயா, செப் 25
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒற்றுமை அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது இச்செய்தியை நான் உறுதிப்படுத்தியுள்ளேன் என்று அவர் சொன்னார்.
அதேசமயம், அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவுக்கூடை அன்பளிப்புக்காக சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கெடா, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்து மயானம் அல்லது இடுகாடுகள் நிர்மாணிப்பதற்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தின் நலனை உறுதி செய்யும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில திட்டங்கள் தொடரப்படவுள்ளன.

முன்னதாக, அரசாங்கம் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு (MITRA) குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.
மேலும், தேசிய தொழில் முனைவோர்களுக்கான பொருளாதார நிதி (TEKUN), அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றின் வழி, இந்திய சமூகத்திற்காக சில நிதிகளையும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், எதிர்காலத்தில் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை தொடர்ந்து உயர்த்தப்படும் என்று நான் பெரிதும் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

