ஷா ஆலம், செப். 26 – ஆட்சியாளரை தகாத முறையிலும் அவமதிக்கும்
வகையிலும் அறிக்கை வெளியிட்டதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர்
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்ஜிடம் கெடா மந்திரி புசார்
பகிரங்க மன்னிப்பு கோரினார்.
மந்திரி புசாரின் நியமனத்தை சிறுமைப்படுத்தும் விதமாக வெளியிட்ட
அந்த அறிக்கை தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி மற்றும் சிலாங்கூர் மக்களிடமும் தாம் மன்னிப்பு
கோருவதாக டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் கூறினார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி ஆட்சியாளரை
அவமரியாதையாகவும் சிறுமைப்படுத்தும் கருத்து வெளியிட்டதாகக் கூறி
எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவுக்கு நான் வெளியிட்ட
அறிக்கைக்காக மிகுந்த பணிவன்புடனும் மரியாதையுடனும் மேன்மை
தங்கிய சுல்தான் ஷராபுடினிடம் எனது மனப்பூர்வமான மன்னிப்பைக்
கோருகிறேன்.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் சிலாங்கூரில் இருந்த
போது அநாகரீகமான, மனதைப் புண்படுத்தும் வகையிலான, கடினமான
வார்த்தைகளை நான் பயன்படுத்தியிருக்கக் கூடாது.
ஆகவே. அனைத்து தகாத வார்த்தைகளுக்காகவும் ஆழ்ந்த வருத்தத்துடனும் பணிவுடனும் ஆட்சியாளரிடமும் மந்திரி புசார் மற்றும் மாநில மக்களிடமும் நான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று இங்குள்ள விஸ்மா டாருள் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா