



செமினி, ஜன.4-
செமினி இந்திய மக்கள் சங்கத்தின் விளையாட்டு மன்றம் இந்திய பள்ளி மாணவர்களுக்கான பூப்பந்து பயிற்சியை நடத்தி வருகிறது.
மூத்த விளையாட்டாளர்கள் மூலமாக நடத்தி வரும் இப்பயிற்சியில் 50 வயதிற்கும் மேற்பட்ட 15 பேர் ஈடுபட்டு இலவசமாகப் பூப்பந்து பயிற்சியை வழங்கி வருகின்றனர் என்று இம்மன்றத்தின் தலைவர், கே.எஸ்.ராம் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி பூப்பந்து விளையாட்டில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கானச் சங்கம் பதிவுச் செய்யப்பட்டு 12 ஆண்டுகளாகி விட்டது. இது இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களும் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு இலவசப் பூப்பந்து விளையாட்டுப் பயிற்சியையும் கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் வழங்கி வருகிறார்கள்.
இப்பயிற்சியில் 8 முதல் 16 வயதிற்குட்பட்ட சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 4 மணி நேரத்திற்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
இது செமினி பண்டார் ரின்ச்சிங்கிலுள்ள பூப்பந்து மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இதில் இவர்களின் முக்கிய நோக்கம் நம் இந்திய மாணவர்கள் எந்தவொரு தவறான வழியில் சென்று விடாமல் விளையாட்டுத் துறையில் திறமைசாலிகளாக உருவாக வேண்டும் என்பதாகும் என்று அதன் தலைவர் கே.எஸ்.ராம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவரும் உலுலங்காட் தொகுதித் தலைவருமான டாக்டர் எம்.சுரேந்திரன், காஜாங் சிறைச்சாலையில் முன்னாள் டிசிபி முனைவர் கௌசல்யா தேவி, பிகேஆர் உலு லங்காட் தொகுதி தலைவரும் உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான ராஜன் முனுசாமி, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர்.தியாகராஜா, கேப்டன் எலன், கேப்டன் ஏபி டேனியல், ஜேசன், டாக்டர் கலைச்செல்வி பெருமாள், மன்றத்தின் உறுப்பினர்கள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கான ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர்களுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில் பேசிய டாக்டர் சுரேந்திரன், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் இந்திய மாணவர்களின் பங்கேற்பு அதிகளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நம் இந்திய மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கிச் சமூகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டியது அவசியமாகும்.
கே.எஸ்.ராமின் இந்த முயற்சிக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு அதில் நம் இந்திய மாணவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

