
சமீபத்தில் மலேசிய தெலுங்கு அரவரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில், அதன் தலைவர் தமிழ்ப்பள்ளிகளில் பண்மொழிக் கற்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த கூட்டத்தின் சிறப்பு வருகையாளராக வருகை தந்த பிரதமரின் சிறப்பு அதிகாரியிடம் அந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
5000 ஆண்டுகள் பழைமைமிக்க பண்பாடு, நாகரிகத்தின் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழி மட்டுமே தமிழ்ப்பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் பண்மொழிக் கற்கும் திட்டத்தை அனுமதித்தால் தமிழ்ப்பள்ளி தனது தனித்துவத்தை இழக்க நேரிடும் என்று உரிமை அரசியல் இயக்கத்தின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் மலாய் மற்றும் ஆங்கிலம் பாடங்கள் தமிழ்ப்பள்ளியில் காலம் காலமாக தமிழ் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதை தவிர்ந்து வேறு எந்த மொழியையும் தமிழர்கள் இன்றுவரை அனுமதிக்காமல் தமிழ்ப்பள்ளியின் தனித்துவ இறையாண்மையை ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வருகின்றனர். அதற்கு சான்றாக 2019 கல்வி அமைச்சு அறிவித்த ஜாவி-காட் எழுத்து தாய்மொழி பள்ளிகளில் மலாய் மொழி பாடத்தில் ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து சீனர்களும் இந்தியர்களும் கல்வி அமைச்சின் இத்திட்டத்தை முற்றும் முழுதாக எதிர்த்தனர். சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்ததோடு, நாடு தழுவிய நிலையில் கண்டன கூட்டங்களும் நடந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு காரணம் ஜாவி-காட் மொழி என்பதால் மட்டுமே அல்ல, வேறு எந்த மொழியையும் தமிழ்ப்பள்ளியில் அனுமதிக்க கூடாது என்பதுதான் முதன்மை காரணம். பிற மொழி தாக்கத்திலிருந்து தாய் மொழியை பாதுகாப்பதற்கு எடுக்க கூடிய முடிவுகளில் இதுவும் முதன்மையான ஒன்றாக இருக்கிறது.
தமிழ்ப்பள்ளி தமிழ்வழிக் கல்வி கற்கும் பள்ளியாகவே செயல்பட வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் விருப்பம்.
உதாரணம் மலேசியாவில் சீன சமுகத்தில் மாண்டரின் ( mandarin) கான்தொனிசு ( Cantonise) மற்றும் பல மொழி பேசும் மக்கள் இருந்தாலும், அவர்களின் கல்வி மொழியாக மாண்டரின் ( mandarin) மட்டுமே இருக்கிறது. மற்ற மொழி பேசும் சீனர்கள் அதனை ஏற்று கொண்டு சீன பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவர் அவர் தாய் மொழியை வெளியில் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்கிறார்கள்.
இது போன்ற நடைமுறைதான் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பொருந்தும்.தமிழ்ப்பள்ளிகளை தேர்வு செய்து படிக்க வரும் அனைவரும் தமிழ்மொழியை கல்வி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்ப்பள்ளிகளில் பண்மொழிக் திட்டதை அனுமதிப்பதால் பிற மொழியினரின் சமய பண்பாட்டு நம்பிக்கைகள் உள்ளே நுழைவதற்கு இது ஒரு வாய்ப்பாக எதிர்காலத்தில் அமையும். ஏற்கனவே சமய பண்பாட்டில் தமிழர்கள் இழந்ததை மீட்டெடுக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கால வெள்ளத்தில் பல தடைகளை கடந்தும் , தமிழ்ப்பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக இன்றுவரை அரசியல்வாதிகளும் இயக்கங்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ்ப்பள்ளியின் உடலாகவும் உயிராகவும் திகளும் தமிழ்மொழியின் தனித்துவத்தை சிதைக்கும் பண்மொழி திட்டத்தின் கோரிக்கைகளை கல்வி அமைச்சு எந்த காலத்திலும் அனுமதிக்க கூடாது என்று அவர் கூறினார்.

