
மோண்ட்ரியல், மே 13 – மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானம்
வானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என ஐக்கிய
நாடுகள் சபையின் (ஐ.நா.) போக்குவரத்து மன்றம் நேற்று
உறுதிப்படுத்தியது.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பான ஐ..நா.வின் முடிவை டச்சு
மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் தனித்தனி அறிக்கைகள் மூலம்
வெளியிட்டன.
மொத்தம் 298 பயணிகளை ஏற்றியிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு
ஜூலை மாதம் 17ஆம் தேதி உக்ரேனுக்கு உயரே சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானத்தில் 196 டச்சு பயணிகளும் 38 ஆஸ்திரேலிய பயணிகளும்
இருந்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான இழப்பீட்டை
வழங்குவது என்பது குறித்து அனைத்துலக பொது வான் போக்குவரத்து
மன்றம் எதிர்வரும் வாரங்களில் முடிவெடுக்கும் என அவ்விரு அரசுகளும்
கூறின.
ஆம்ஸ்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த
விமானம் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய
படைகளுக்கும் இடையே போர் நிகழ்ந்து கொண்டிருந்த கிழக்கு உக்ரேன்
வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்காக இரு ரஷ்ய பிரஜைகளையும் ஒரு
உக்ரேனியரையும் குற்றவாளிகள் என கடந்த 2022 நவம்பர் மாதம் டச்சு
நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். எனினும் இதனை மோசமான தீர்ப்பு என
வர்ணித்த ரஷ்யா தனது பிரஜைகளை ஒப்படைக்கப்போவதில்லை என்றும்
கூறிவிட்டது.
எம்.எச்.17 விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின்
குடும்பத்தினருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதிலும்
சம்பந்தப்பட்டவர்களை இதற்கு பொறுப்பேற்கச் செய்வதிலும் இது ஒரு
முக்கியமான படியாகும் என்று டச்சு வெளியுறவு அமைச்சர் காஸ்பர்
வெஸ்ட்காம்ப் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த முடிவு அனைத்துலகச் சமூகத்திற்கு தெளிவான முடிவை
அனுப்புகிறது. சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்துலக சட்டத்தில்
தண்டனையின்றி தப்ப முடியாது என அவர் குறிப்பிட்டார்.
bbc