

ஈப்போ, ஜுன். 24: பேராக் எழுத்தாளர் சங்க தலைவராக சிவா லெனின் போட்டியின்றி பொறுப்பேற்பதற்கு நன்றியும் வாழ்த்தினையும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார், பேராக் எழுத்தாளர் சங்க நிகழ்வின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்தபோது தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை மற்றும் எழுத்தாளர் வாசகர் வட்டம் ஆகிய நிகழ்வுகளை பேராக் எழுத்தாளர் சங்கம் ஏற்று நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளின் மொத்த நிதிச் செலவுகளை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
எழுத்தாளர் சங்கம் என்பது தூர நோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். குறிப்பாக, எதிர்வரும் 50 ஆண்டுகளில் நம் சமூக நிலைப்பாட்டை நன்கு ஆய்வு செய்து, அதற்கான திட்டங்களை வரையறுத்து செயல்படும்படி அவர் அறிவுறுத்தினார்.

அண்மையில் ஒரு சில நாடுகளுக்கு பணி நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்குள்ள தமிழ் சங்கத்தினரின் செயல் நடவடிக்கைகளை காணும் பொழுது வியந்து போனோன். அங்குள்ளவர்கள் தமிழ்மொழியை காப்பதற்கும், இந்து சமயத்தை பின்பற்றி செயல்படுவதற்கும் பல வகையான செயல்நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விசயமாகும் என்று அவர் கருத்துரைத்தார்.
அவர்களை போன்று மலேசிய மண் இந்தியர்கள் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் நமது அடையாளங்களை காப்பதில் பெரும் அக்கறை கொள்ள வேண்டும். குறிப்பாக, மூடப்படும் தமிழ்ப்பள்ளிகளின் உரிமத்தை( லைசன்ஸ்) கொண்டு அதிகமான எண்ணிக்கையில் புறநகர்களில் வாழும் இந்தியர்களின் இடங்களில் தமிழ்ப்பள்ளிகளை கட்டுவதற்கு முற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் 2025 முதல் 2027 வரையிலான பேராக் எழுத்தாளர் சங்க நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தலைவராக சிவா லெனின், தணத்தலைவராக ச.முணியான்டி, செயலாளர் கவிஞர் மகேந்திரன் நவமணி, பொருளாளர்: ஆறுமுகம் மற்றும் செயலவை உறுப்பினராக: சுப.கதிரவன், லெ.நாராயணன், ந.வீரப்பன், சு.ஹேமாவதி, அ.இளவரசி, கி.மணிமாறன், ச.லிங்கேஸ்வரன், க.குழந்தைமேரி, ம.சந்தனதாஸ், சி.த.பழனியம்மாள். இவர்களுடன் உட்கணக்காய்வாளர்களாக பாவலர் முத்துப்பாண்டி மற்றும் ஏஞ்சலா சவரிமுத்து தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் எழுத்துத்துறையில் சிறந்த அர்பணிப்பை வழங்கிய மூவருக்கு தக்கார் சிறப்பு செய்யப்பட்டனர்.

