
பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் இன்று காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார். மறைந்த சரோஜாதேவிக்கு திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்
கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன.,7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகாகி புகழ்பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்’ என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்றார்.
கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். எம்.ஜி.ஆருடன் 26 திரைப்படங்கள் மற்றும் சிவாஜியுடன் 22 திரைப்படங்கள் நடித்துள்ளார். பாலும் பழமும், பாசம், ஆலயமணி, கல்யாணியின் கனவன், தாய் சொல்லை தட்டாதே, தர்மம் தலைகாக்கும் என்ற திரைப்படங்கள் மிக பிரபலமானது.