ஆலயங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலம்! பாப்பா ராய்டுவின் பரிந்துரையை வரவேற்கிறேன் – டாக்டர் சுரேந்திரன்

ஷா ஆலம், ஆக. 7– ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 1 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் ஆலயங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு பரிந்துரை செய்திருப்பதை பெரிதும் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

ஒரு ஏக்கர் பரப்பளவு என்பது மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வெறும் 0.1 விழுக்காடு மட்டுமே.

கார் நிறுத்துமிடம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு கூடுதல் பரப்பளவிலான நிலம் தேவைப்படுவதாக லீமாஸ் எனப்படும் பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயல்குழுவின் இணைத் தலைவருமானபாப்பா ராயுடு நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலத்திற்கான குறைந்தபட்ச பரப்பளவு 10,000 சதுர அடியாக இருக்க வேண்டும் என்று திட்டம் இருந்தாலும்
அதிக பக்தர்கள் வரக்கூடிய அல்லது வருடாந்திர விழாக்களை ஏற்பாடு செய்யும் கோயில்களுக்கு இந்த அளவு நிலம் போதுமானதாக இல்லை என்பதை பாப்பா ராயுடு சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆகவே, வாகன நிறுத்துமிடம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான மையம் உட்பட முழுமையான வசதிகளை ஏற்படுத்த குறைந்தபட்சம் 1 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட இடம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை வரவேற்கிறேன் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் பல ஆலயங்கள் குறிப்பாக தோட்டங்கள் மற்றும் தனியார் நிலத்தில் நிலப் பிரச்சனையை எதிர் நோக்கி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண பாப்பா ராயுடு எடுக்கும் முயற்சிகளுக்கு சமுதாயம் பக்கப் பலமாக இருக்கும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles