
புத்ரா ஜெயா, ஆக 14-
அடுத்த ஆண்டு நடைபெறும் சிலாங்கூர் மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது.
சுக்மா போட்டி உயர்மட்ட குழுவின் மதிப்பாய்வைத் தொடர்ந்து Petangue, Muaythai மற்றும் சிலம்பம் ஆகியவை விருப்ப விளையாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, சரவாக் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா மற்றும் மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCM) தலைவர் டான் ஸ்ரீ நோர்சா ஜகாரியா ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சிலாங்கூர் சுக்மாஏற்பாட்டுக் குழுவின் தலைவரான சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி இந்த முன்மொழிவை முன்வைத்தார்.
சிலாங்கூர் சுக்மாவில் இப்போது 30 கட்டாய விளையாட்டுகளும் ஏழு விருப்ப விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளது.
மேலும் எந்த முன்மொழிவுகளும் அல்லது மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படாது என்பதை சுக்மா உயர் மட்ட குழு உறுதிப்படுத்தியுள்ளது.
சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாமல் போனபோது இந்திய சமுதாயமே பொங்கி எழுந்து குரல் கொடுத்தது.
இப்போது இறுதியாக சுக்மாவில் சிலம்பம் இடம் பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது

