கற்றல் கற்பித்தலுக்கு உகர்ந்த நிலையில் இல்லை – கோல பெர்ணம் தமிழ்ப்பள்ளிக்கு களமிறங்கினார் சிவநேசன்!!

பாகான் டத்தோ,ஆக28: கோல பெர்ணம் தொட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்திர தீர்வு காண மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இஸ்லாஆ ல்லாதவர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் அப்பள்ளிக்கு இன்று காலை விரைந்தார்.

அப்பள்ளிக்கூடத்தின் முதன்மை கட்டிடம் கற்றல் கற்பித்தலுக்கு உகர்ந்த நிலையில் இல்லையென பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் அப்பள்ளியின் இச்சிக்கலை களைய பொதுப்பணித்துறை.மாவட்ட கல்வி இலாகா,துணை கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியென அனைவரோடும் நிலவரத்தை நேரில் கண்டறிய சிவநேசன் களத்தில் இறங்கினார்.

இப்பள்ளிக்கூடம் 1930களில் கட்டப்பட்ட்து.பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என இருபிரிவுகளாக இத்தோட்டம் இருந்து வந்ததாக அத்தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஒருவருமான சிவநேசன் நினைவுக்கூர்ந்தார். மேலும்,தொடக்கத்தில் தமிழ்/தெலுங்கு பள்ளியாக இருந்த இப்பள்ளிக்கூடம் காலவோட்டத்தில் தெலுங்கு மாணவர்கள் இல்லாத சூழலில் தமிழ்ப்பள்ளியாக மட்டுமே இயங்கி வந்துள்ளது என்றார்.

நடப்பில்,கறையான் அரித்து இப்பள்ளியின் முதன்மை கட்டிடம் பதுகாப்பு அற்ற நிலையை எட்டியுள்ளது.தற்போது அப்பள்ளியின் மாணவர்கள் அப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை தான் வகுப்பறைகளாக பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,மாவட்ட பொதுப்பணிதுறை இப்பள்ளியை சீரமைக்க வாய்ப்புள்ளதாக கூறினாலும்,மாநில பொதுப்பணித்துறை அதற்கு சாத்தியமில்லை என்கின்றனர்.இச்சூழலில் இப்பள்ளிக்கு நிரந்திர தீர்வுகாண அரசு இலாகாகள் உட்பட பள்ளியின் தலைமையாசிரியர்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளியின் வாரியக்குழு என அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார் சிவநேசன்.

முன்னதாக,இப்பள்ளியின் நிலைகுறித்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசனின் சேவை மையத்தில் கல்வி துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரி திரு.இளங்கோ,தலைமையாசிரியர்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,வாரியக்குழு என அனைத்து தரப்பினரோடும் சிவநேசன் கலந்துபேசியதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு சூழலில் இப்பள்ளியை மீண்டும் கற்றல் கற்பித்தலுக்கு பாதுகாப்பானதாக உருமாற்றம் செய்ய மூன்று வழிகளை தாம் ஆராய்ந்து வருவதாக கூறிய அவர் இப்பள்ளியை முழுமையாக புதிய கட்டிடமாக கட்டுவது,பழுதுப்பார்த்து சீரமைப்பது மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு உகர்ந்த நிலையிலான நவீனகொள்கலனை அமைப்பது என மூன்று ஆலோசனைகளை அவர் முன் வைத்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை,இப்பள்ளியின் எதிர்கால சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் போது இம்மூன்றில் நவீன வசதிகளுடனான கொள்கலனை அமைப்பது சரியானத் தேர்வாக இருக்கலாம் எனவும் கூறிய சிவநேசன் துணை கல்வி அமைச்சுடன் கலந்துபேசி சரியான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வு காணப்படும் என்றார்.

அதேவேளையில்,அடுத்த மாதம் தொடங்கி இப்பள்ளியின் மாணவர்கள் அருகிலுள்ள மற்றொரு தமிழ்ப்பள்ளியில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வார்கள் எனவும் இப்பள்ளி அப்பள்ளியில் ஒரு அங்கமாக செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

நடப்பு சூழலில் இப்பள்ளியில் 11 மாணவர்கள் தங்களின் கல்வியை தொடரும் நிலையில் அவர்களில் தோட்டத்திலிருந்து வரும் மாணவர்கள் மூவர் மட்டுமே.எஞ்சிய 8 மாணவர்கள் சிம்பாங் அம்பாட் பகுதியிலிருந்து வருகின்றனர்.இந்நிலையில்,தோட்டத்திற்கு வெளியிலிருந்து வரும் மாணவர்களின் பள்ளி வேன் கட்டணம் செலுத்தாதையும் அறிந்த சிவநேசன் இவ்வாண்டு மற்றும் அடுத்தாண்டுக்கான கட்டணத்தை செலுத்த முதற்கட்டமாக வெ.8ஆயிரத்தையும் வழங்கினார்.

முன்னதாக இப்பள்ளிக்கு கடந்த 2018இல் வெ.15 ஆயிரத்தை வழங்கியிருப்பதையும் நினைவுக்கூர்ந்த சிவநேசன் அண்மையில் மத்திய அரசு நிதி வெ.50 ஆயிரமும் கிடைத்துள்ளது.அதேவேளையில்,பள்ளியின் கழிப்பறையை சீரமைக்கவும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles