
கோலாலம்பூர், பிப் 25-
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, உயர்கல்வி நிலைய பட்டதாரிகளின் திறன்கள் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்யும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இன்று மேலவையில் எழுப்பப்பட்ட வாய்மொழி கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்த முக்கிய இலக்கை வலியுறுத்தினார்.
நாட்டின் திறமையாளர்களின் வளர்ச்சி என்பது வெறும் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், வேலைவாய்ப்புச் சந்தையின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையே திட்டமிட்ட கூட்டு ஒத்துழைப்பை மனிதவள அமைச்சு பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நோக்கத்திற்காக, தொழில்துறையினரால் வழிநடத்தப்படும் 18 ‘மைமாஹிர் எதிர்காலத் திறன் திறமையாளர் மன்றம்’- ‘MyMahir Future Skills Talent Council’ (FSTC) அமைப்புகளை மனிதவள அமைச்சு நிறுவியுள்ளது.
கடந்த டிசம்பர் 2025 நிலவரப்படி, சுமார் 59,000 தொழிலாளர் தேவைகளை இந்த மன்றம் கண்டறிந்துள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் துல்லியமான மற்றும் சந்தை தேவைக்கு ஏற்ற பயிற்சித் திட்டங்களை வடிவமைக்க ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
மனிதவள அமைச்சின் கீழ் உள்ள பயிற்சி முகமைகள் முக்கியமாக தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்கு ‘திவெட்’ (TVET) முன்னுரிமை அளித்தாலும், உயர்கல்வி நிலைய பட்டதாரிகளும் பல்வேறு உயர்தர திட்டங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றனர் என்று டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் விளக்கினார்.
அதன்படி, மனிதவள மேம்பாட்டு வாரியம் (HRD Corp), ‘Internship Training Scheme’ (ITS) எனும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முதலாளிகளின் நேரடித் தேவைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முறையான நடைமுறைப் பயிற்சிகளை வழங்குகிறது. இதற்கான பயிற்சி பாடத்திட்டங்கள் நேரடியாக முதலாளிகளுடன் இணைந்தே உருவாக்கப்படுகின்றன.
தவிர, தேசிய திறமையாளர் மேம்பாட்டு நிறுவனம் (TalentCorp) அதன் ‘MyMahir SkillsLab’ திட்டத்தின் மூலம் தரவு பகுப்பாய்வு (Data Analytics), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற எதிர்காலத் திறன் துறைகளில் தீவிரப் பயிற்சிகளை வழங்குகிறது. இத்திட்டம் நேரடித் திட்டப்பணிகள் சார்ந்த பயிற்சிகளையும், தொழில்துறை வழிகாட்டல்களையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோருக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்கள் அல்லது பணி அமர்த்தல்களுக்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் பட்டதாரிகளுக்கு, சந்தையின் சராசரி ஊதியத்தை விட 5 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் ஆரம்ப ஊதியம் வழங்கப்படுவதையும் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்தமாக, அரசாங்கத்தின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பட்டதாரிகள் வெறும் கல்வித் தகுதியோடு மட்டும் நிற்காமல், எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தேவையான போட்டித்திறன் மிக்கவர்களாகத் திகழ்வதை உறுதி செய்கின்றன.

