
ஈப்போ, மார்ச் 20-
பேரா மாநிலத்தில் தாப்பா மற்றும் தைப்பிங் மருத்துவமனையில் அமைந்துள்ள ஆலயங்கள் உட்பட மொத்தம் 9 ஆலயங்கள் கூட்டரசு நிலத்தில் அமைந்திருக்கும் நிலையில் அச்சிக்கலுக்கு தீர்வை ஏற்படுத்த நில இலாகாவினர் மனிதவளம், சுகாதாரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசனைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தாப்பா பொது மருத்துவமனை மற்றும் தைப்பிங் பொது மருத்துவமனை வளாக ஆலங்கள், தைப்பிங் குவாலா செபெத்தாங்கில் அரசு கிளினிக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஆலயம் உட்பட மேலும் சில சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவற்றை அகற்றும் நடவடிக்கை குறித்து டத்தோ சிவநேசனிடம் ஆலோசனைப் பெறவும் சிக்கலை தீர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கலந்து பேசினர்.
இந்நிலையில், தாப்பா மற்றும் தைப்பிங் பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆலயங்களை அகற்ற முடியாது. அதன் பின்னணியை நன்கு ஆராய்ந்தால் அதன் உண்மை புலப்படும் என்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் வரலாற்றையும் சீர்த்தூக்கி பார்க்க வேண்டும் என்றும் சிவநேசன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கூட்டரசுக்கு சொந்தமான நிலத்தில் அந்த ஆலயங்கள் இருந்தாலும் அதனை அகற்றவோ அல்லது இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைகளையோ மாநில அரசு தான் எடுக்க முடியும். நிலம் மாநிலத்தின் அடிப்படையில் சார்ந்துள்ளது என்றார்.
மருத்துவமனை, பொதுப்பணி துறை உட்பட அரசு நிலங்களிலுள்ள ஆலயங்களை அவசர அவசரமாகவோ அல்லது ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தாமலோ அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதன் தோற்றம், உருவாக்கத்திற்கான காரணம், வரலாறு என பல கோணங்களில் ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் நினைவுறுத்திய சிவநேசன் சட்டரீதியாக அகற்ற முயன்றாலும் சம்பந்தப்பட்ட ஆலயங்களின் தொன்மை மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அது முடியாத ஒன்று எனவும் வழக்கறிஞருமான டத்தோ சிவநேசன் விவரித்தார்.
மருத்துவமனை வளாகங்களில் அமைந்திருக்கும் ஆலயங்கள் பழைமையானது. அது அங்குள்ளது என்பது இப்ப புதுசா கண்டுப்பிடிக்கப்பட்டதல்ல. ஆலயங்கள் அங்கிருப்பது சம்பந்தபட்ட துறைகளுக்கும் அமைச்சர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நீண்டக்காலமாகவே தெரியும். முன்பு இந்தியர்கள் மருத்துவமனைகளிலும் பொதுப்பணி துறைகளிலும் அதிகம் வேலையில் இருந்துள்ளனர் என்பதற்கான வரலாற்று சான்றுதான் இது என்றும் வந்திருந்த அதிகாரிகளுக்கு டத்தோ சிவநேசன் நினைவுறுத்தினார்.
மேலும், இதுநாள் வரை மருத்துவமனையிலுள்ள ஆலயங்களால் நோயாளிகளுக்கோ, மருத்துவர்களோ அல்லது அங்கு பணி புரிபவர் உட்பட பொது மக்களுக்கு கூட எந்தவொரு சிக்கலோ சங்கடங்களோ உருவானதில்லை என்பதையும் சுட்டிக்காண்பித்த சிவநேசன் எந்தவொரு சிக்கலையும் ஏற்படுத்தாமல் ஒரு இனத்தின் நம்பிக்கையாக பெரும் வரலாற்றை சுமந்து நிற்கும் மருத்துவமனை வளாகத்திலிருக்கும் ஆலயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிந்திப்பது அவசியமற்றது என்றும் தன் கருத்தையும் ஆழமான பார்வையையும் அவர் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், குவாலா செபெத்தாங் பகுதியில் அரசு கிளினிக் கட்ட ஒதுக்கப்பட்ட நிலைத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தை இடம் மாற்றம் செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கையை நாம் விவேகமாய் கையாளலாம் என்றும் குறிப்பிட்ட டத்தோ சிவநேசன் மேலும் சில சிறு சிறு கட்டிடங்களாக அமைக்கப்பட்டிருக்கும் சிறுகோவில்களை இடம் மாற்றம் செய்யவோ அல்லது அந்த சிறுகோவில் சிலைகளை அருகிலுள்ள ஆலயங்களுக்கு முறைப்படி கொண்டு செல்லவோ மேற்கொள்ளும் பணிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்றார்.
சிலைகளை முறைப்படி எடுத்து அதனை அருகிலுள்ள ஆலயங்களுக்கு வழிபாடுக்காக கொண்டு செல்லும் பணியை தனது தலைமையில் ஆகம முறைப்படி மேற்கொள்ளும் தனிக்குழு இயங்குவதாகவும் அதற்கான செலவினத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்வதாகவும் நில இலாகா அதிகாரிகளிடம் மாநில அரசின் முன்னெடுப்பு குறித்தும் அவர் விவரித்தார்.
இந்நிலையில், பேரா மாநிலத்தைப் பொருத்தமட்டில் ஆலய விவகாரங்களை விவேகமாகவும் எவ்வித சர்ச்சையும் இல்லாமல் மாநில அரசு கையாள்வதாகவும், அதற்கான சிறப்புகுழு அமைத்து அக்குழுவிற்கு தன்னை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு தெரிவித்த டத்தோ சிவநேசன் இதுவரை எழும் எல்லா ஆலய சிக்கல்களுக்கும் நன்முறையில் சுமூகமாய் தீர்வு காணபட்டு வருவதாகவும் கூறினார்.தேசிய ஒருமைப்பாட்டுக்கு சின்னதாய் ஒரு பாதிப்புக்கூட ஏற்படாத வகையில் பேரா மாநிலத்தில் இச்சிக்கல்கள் தீர்வை நோக்கி நகர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
அதேவேளையில்,இந்து ஆலய விவகாரங்களில் அனைத்து தரப்பும் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டோ அல்லது இன,மத ரீதியிலான முடிவுகளையோ அல்லது ஒரு தரப்பிற்கு சாதகமான முடிவுகளை எடுப்பதோ இருத்தல் கூடாது என்றும் நினைவுறுத்திய பேரா மாநில ஆலயங்களின் காவலராகவும் செயல்படும் டத்தோ சிவநேசன் பேரா மாநிலத்தில் எந்தவொரு ஆலயப் பிரச்னையாக இருந்தாலும் தனது கவனத்திற்கு கொண்டு வராமல் நடவடிக்கையில் இறங்ககூடாது எனவும் நில அதிகாரிகளுக்கு வேண்டுக்கோள் விடுத்தார்.
எனவே,பேரா மாநில அரசாங்கம் ஆலய விவகாரங்களில் நனிச் சிறந்த முன்னெடுப்பையும் திட்டமிடலையும் கொண்டுள்ளது.அதனைப் பின்பற்றியே நடவடிக்கைகல் இருக்க வேண்டும்.ஆலய விவகாரங்களில் தனது தலைமையிலான சிறப்பு குழு துள்ளியமான செயல்பாடுகளையும் நடவடிக்கைகளியும் கொண்டிருக்கும் நிலையில் நில இலாகா எவ்வித ஐயமும் இன்றி தன்னோடு கலந்து பேசி விவேகமான முடிவெடுக்க தன்னை எப்பவுமே அணுகலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதுவரை ஆலய விவகாரங்களில் ஒரு வகை ஐயமும் தெளிவின்மையும் பற்றிக்கொண்டிருந்த சூழலில் பேரா மாநில அரசாங்கமும் அமைக்கப்பட்ட சிறப்புகுழுவின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் உணர்ந்த நில அதிகாரிகள் டத்தோ சிவநேசனின் நடவடிக்கைகளால் நிறைவு கொண்டு,பேரா மாநிலத்தில் ஆலயப் பிரச்னைகளுக்கு டத்தோ சிவநேசனின் பார்வைக்கு கொண்டு வராமல் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் அவரது ஆலோசனையை கேட்டறிந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் போது நில இலாகா இயக்குநர் இராஜா கமாரியா பிந்தி ராஜா அப்துல் இரஹ்மான்,துணை இயக்குநர் முகமட் ஜெப்ரி பின் முகமட் ஜைனுல் மற்றும்
நில இலாகாவின் துணை இயக்குநர் தஹஸ்னான் அசிசூல் பின் இசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

