
ஜோகூர் பாரு: மெட்ரிகுலேஷன் திட்ட மாணவர்களுக்கு இணையாக ஆறாம் படிவ மாணவர்களுக்கும் படியலவன்ஸ் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் (KPM) கீழ் இருந்த பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி முறையான ஆறாம் படிவம் மற்றும் மெட்ரிகுலேஷன் ஆகியவற்றை உயர்கல்வி அமைச்சு (KPT) கையகப் படுத்தும் நடவடிக்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.
“ஆறாம் படிவம் மற்றும் மெட்ரிகுலேஷன் படியலவன்ஸ் சமமாக்கப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டு விட்டது, செயல் படுத்தும் முறைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டு வருவதால், நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், ” என்று இன்று இங்குள்ள தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கழக (IPG) வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
உயர்கல்வி அமைச்சின் கீழ் பல்கலைக் கழகத்திற்கு முந்தைய கல்வி நிலையில் இருந்தும், மெட்ரிகுலேஷன் மாணவர்களைப் போல் தங்களுக்கு ஏன் படியலவன்ஸ் வழங்கப் படவில்லை என ஆறாம் படிவ மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
தற்போது, மெட்ரிகுலேஷன் மாணவர்கள் மாதந்தோறும் 250 ரிங்கிட் மாணவர் வாழ்க்கை உதவித் தொகையைப் (BSHP) பெறுகின்றனர்.
ஆறாம் படிவ மாணவர்கள் பள்ளிப்படிப்புக்குப் பிந்தைய பிரிவின் ஒரு பகுதியாக இருப்பதால், உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மேலும் விளக்கினார்.
எனவே, ஆறாம் படிவம் அல்லது மெட்ரிகுலேஷன் போன்ற பல்கலைக்கழகத்திற்கு முந்தைய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

