
சிரம்பான் ஏப் 27-
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருணுக்கு அளித்த ஆதரவை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
மந்திரி புசாரின் தலைமை மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாக, 14 மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்ததாக மாநில அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.
இது குறித்து மாநில சட்டமன்ற சபாநாயகர், மாநில செயலாளருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்படும் என்று அவர் இன்று பரபரப்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் நிறுவனங்கள், அரசியலமைப்பு, சட்டங்களை நாங்கள் முழுமையாக ஆதரித்து பாதுகாக்கிறோம்.
மேலும் மக்களின் நல்வாழ்வு, மாநிலப் பொருளாதாரத்தின் நோக்கங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இதற்கு மாநில நிர்வாகத்தில் சிறந்த பங்கை ஆற்றக்கூடிய ஒரு நிலையான அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக 11 சட்டமன்ற உறுப்பினர்கள், கெஅடிலான் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமானா 1 சட்டமன்ற உறுப்பினரை கொண்டுள்ளது.
தேசிய முன்னணி சார்பில் அம்னோ 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

