
ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சிவசங்கர், குர்டிப் கவூர், சசிதரன் மற்றும் கண்ணன் ஆகியோர் பூச்சோங்கில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பயிற்றுநர் பயிற்சி திட்டத்தில் அடுத்த வாரத்தில் பங்கேற்கவுள்ளனர்.
பயிற்றுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பிறகு இவர்களுக்கு பயிற்றுநருக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
அதன் வழி இந்த நால்வரும் மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்படும்.
பயிற்றுநர் பயிற்சியில் பங்கு பெறுவதற்கு ஒருவர் குறைந்தது 2,500 வெள்ளி கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கான பயிற்றுநர் பயிற்சிக்கான அனைத்து கட்டணத்தையும் மனித வள அமைச்சு ஏற்றுக் கொள்கிறது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இந்த பயிற்சி மையத்திற்கு நேற்று முன்தினம் நேரடி வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
அப்போது ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா இந்த கோரிக்கையை முன் வைத்தபோது மறுகணமே நான்கு பேருக்கான பயிற்றுநர் பயிற்சி கட்டணத்தை அமைச்சு ஏற்றுக் கொள்கிறது என்று சிவகுமார் அதிரடியாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

