


மலாக்கா, ஜூன் 24- மனிதநேயத்தையும் சமூக ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை மற்றும் மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற ‘இரத்த தான முகாம் 2026’ பல்லின மக்களிடையே பேராதரவைப் பெற்று மிகச் சிறப்பாக நிறைவுற்றது.
தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 70-ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மைடின் வணிக வளாகத்தில் இம்முகாம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
“ஒரு துளி குருதி, ஒரு மில்லியன் நம்பிக்கை” எனும் உன்னத நோக்கத்தோடு நடைபெற்ற இம்முகாமில், இனம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளைக் கடந்து பலதரப்பட்ட மலேசிய மக்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களின் இரத்தத்தைக் கொடையாக வழங்கினர். இது மலேசியர்களிடையே உள்ள அசைக்க முடியாத ஒற்றுமையையும், பிறருக்கு உதவும் நற்பண்பையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த செல்வி மயூரி சந்திரசேகரன் கூறுகையில், “இன்றைய முகாமின் வெற்றிக்குக் காரணமான அனைத்து இரத்தக் கொடையாளர்கள், தொண்டூழியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் வழங்கிய ஒவ்வொரு துளி இரத்தமும், மருத்துவமனையில் உயிர் போராட்டத்தில் இருக்கும் ஒருவருக்குப் புதிய வாழ்க்கையையும் நம்பிக்கையையும் வழங்கும். பன்முகத்தன்மையோடு வாழும் நம் சமுதாயத்தின் ஒற்றுமையே இந்த நிகழ்வின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய தூணாகும்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மணிமன்றத்தின் 70 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தில், நாட்டின் சுகாதாரத் துறைக்கு வலுசேர்க்கும் இத்தகைய சமூக நலப்பணிகள், இளைஞர்களிடையே சமூகப் பொறுப்பையும் தொண்டூழியச் சிந்தனையையும் வளர்க்கும் முக்கிய தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய உன்னதமான இரத்த தான விழிப்புணர்வு மக்களிடையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்திலும் பொதுமக்கள் தங்களின் ஆதரவை இதேபோல் நல்க வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

