
உலு கிள்ளானில் செயல்பட்டு வரும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் பயிலும் தன் மகனை ஆசிரியர் ஒருவர்
கடுமையாக தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக தாயார் மகேஸ்வரி சுப்ரமணியம் போலீஸ் புகார் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தன் மகன் முட்டி கால் மற்றும் நெற்றி பகுதிகள் வலிப்பதாக தன்னிடம் கூறியதாக அவர் சொன்னார்.
ஏன் வலி என்று வினவிய போது பள்ளியில் தனது மகனால் கால்பந்து பயிற்சியை சரியாக மேற்கொள்ள முடியாததால் ஆசிரியர் கடுமையாக
அடித்த விவகாரம் தெரிய வந்தது.
அதன் பின்னர் தன் மகனை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
மருத்துவமனை அறிக்கையில், தன் மகனின் முட்டி கால் பகுதிகளில் திசு கிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது என்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பள்ளி தரப்பினரிடம் கேட்ட போது தமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என பொறுப்பின்றி கையை விரித்து விட்டனர்.
எனவே, தன் மகனை போல் வேறு எந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தாம் போலீஸ் புகார் செய்துள்ளதாக மகேஸ்வரி கூறினார்.