


புத்ரா ஜெயா செப் 25-
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் செண்டரில் மாபெரும் அளவில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் இந்த கார்த்திகை தீப விழாவில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் முதல் தீபத்தை ஏற்றி வைக்கும்படி இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தந்தை என்று போற்றப்படும் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு நேரடி அழைப்பிதழை வழங்கினார்.
மனிதவள அமைச்சின் சீனியர் அந்தரங்க செயலாளர் லிம் இந்த அழைப்பிதழை பெற்றுக் கொண்டார் .
நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை தீப விழாவில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நமது பாரம்பரியத்தின் பலத்தை அறுவடைச் செய்து, தற்கால இந்திய சமுதாயத்தின் சவால்களைத் தகர்த்து, எதிர்கால தலைவர்களாக நமது சமுதாயத்தை முன்னெடுக்க ஒரே நம்பிக்கையுடன் அக்னி சக்தியுடன் இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையில்
ஶ்ரீ முருகன் நிலையம் இந்த கார்த்திகை தீப விழாவை எழுச்சியுடன் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய மாணவர்கள் மத்தியில் கல்வி புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 1982 ஆம் ஆண்டு டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தலைமையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 41 ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை சாரும்.
கடந்த 41 ஆண்டுகளாக இரவு பகல் பாராது அயராத உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளினால் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இன்று நாட்டில் போற்றப்படும் ஒரு தலைசிறந்த கல்வி நிலையமாக விளங்கி வருகிறது.
ஏழை இந்திய மாணவர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தை கல்வி புரட்சி மூலம் தட்டியெழுப்பிய வரலாற்று கூறுகளை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவதிலும் ஸ்ரீமுருகன் கல்வி நிலையம் சாதனை படைத்திருக்கிறது.
இன்று புத்ரா ஜெயாவில் மனிதவள அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் கந்தா, ராஜேஸ்வரி, ஶ்ரீ கணேக்ஷ் ராவ், ஶ்ரீ சாந்தி, புகனேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.