
மலேசிய நாட்டின் வரலாற்றில் இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் பாரம்பரிய உணவான நாசி கண்டார் உணவை அவமதிக்கும் வகையில் சில தரப்பினரின் செயல் அமைந்துள்ளதாக பிரெஸ்மா கண்டனம் தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி நாசி கண்டார் என ஓர் உணவகம் வியாபாரம் செய்து வரும் காணொளிகள் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சம்பந்தப்பட்ட உணவகம் நாசி கண்டாரின் பாரம்பரியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கமான பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி சாடினர்.
இந்திய முஸ்லிம் சமுதாயத்தினர் பாரம்பரியமாக நாசி கண்டார் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான நாசி கண்டார் உணவகங்கள் உள்ளன.
பன்றி இறைச்சி முஸ்லிம்களுக்கு ஹராமானது. அதனால் முஸ்லிம்களின் பாரம்பரிய உணவுடன் பன்றி இறைச்சியை தொடர்புப்படுத்துவது தவறான செயலாகும்.
மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தை இந்திய முஸ்லிம் தான் வழிநடத்துவதாக தவறான ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும்.
சம்பந்தப்பட்ட உணவகம் பன்றி இறைச்சி உணவு வியாபாரத்திற்கு நாசி கண்டார் பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என டத்தோ ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.

