தொழில்நுட்பம் –தொழில்திறன் கல்வியில் கவனம் செலுத்துங்கள் – நம்பிக்கையான எதிர்காலம் காத்திருக்கிறது!!துணை அமைச்சர் குலசேகரன் கோரிக்கை!!

உலகளாவிய நிலையில் நடப்பில் தொழில்திறன் கல்வியின் அவசியம் உணரப்பட்டுள்ள நிலையில் உலக நகர்வுகளிலும் முன்னேற்றங்களிலும் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் மலேசிய இந்திய இளைஞர்களும் தொழில்நுட்பம் – தொழில்திறன் சார்ந்த கல்விகளில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.தொழில்நுட்பம் – தொழில்திறன் கல்வியில் தங்களின் பயணத்தை தொடங்கும் நம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையான எதிர்காலம் காத்திருப்பதாகவும் பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்த்திருத்ததிற்கான துணை அமைச்சர் மாண்புமிகு மு.குலசேகரன் நினைவுறுத்தினார்.

மனிதவள அமைச்சராக கடந்தக்காலங்களில் பொறுப்பு வகித்த போது நாடு முழுவதும் தொழில்திறன் கல்வியை விரிவாக்கம் செய்யவும் அதுசார்ந்த பல்வேறு செயல்பாடுகளையும் ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டதையும் நினைவுக்கூர்ந்த துணை அமைச்சர் இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த இலக்கை நோக்கி கொண்டுச் செல்ல TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் சார்ந்த கல்வி பெரும் உத்தரவாதம் அளிக்கும் என்றார்.

வேலை இல்லை என சொல்லி புலம்புவதை காட்டிலும் தொழில்திறன் பயிற்சிகளில் கலந்து தன்னை ஒரு திறன்மிக்கவராகவும் தொழில்திறன் சார்ந்த ஆளுமையாகவும் உருமாற்றம் செய்து கொண்டால் வேலை இல்லா திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சிறந்த தொழில்திறன் முனைவர்களாகவும் சுயமதிப்பீட்டை உயர்த்தி கொள்ளவும் முடியும் என்றும் விவரித்தார்.

அதுமட்டுமின்றி, உலகமயமாக்கல், அறிவு சார்ந்த பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப, தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் இந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் கல்வியானது பெரும் பங்காற்றுகிறது.

மேலும்,தொழில்துறைக்கு தேவையான திறன்மிக்க மனித மூலதனத்தை வழங்குவதற்கும் நாடு உலகளாவிய நிலையில் வளர்ந்த நாடாக உருமாற்றம் காணவும் மட்டுமின்றி அறிவு சார்ந்த செயல்பாடுகளை நோக்கி பொருளாதாரத் துறையின் மாற்றத்தை ஆதரிப்பதற்கு இந்த தொழில் சார்ந்த அணுகுமுறை காலத்தின் தேவையாகவே இருப்பதாகவும் அவர் மேலும் எடுதுரைத்தார்.

நம்பிக்கையான எதிர்காலத்தையும் பொருளாதார ரீதியிலும் வளம் மிக்க நிலையில் அமைத்து கொள்ளவும் தொழில்திறன் கல்வி மிக அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்திய ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் கல்வியில் சிறந்த இலக்கை எட்ட முடியாத மாணவர்கள் தங்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிட்டதாக எண்ணாமல் விடியலை நோக்கி முன்னேற தொழில்திறன் கல்வியில் முனைப்பு காட்ட வேண்டும்.வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அதனை உணராமல் சோர்ந்து விடுவதை காட்டிலும் ஒரு தொழிலை அறிவார்ந்து அதன் நுட்பங்களோடு கற்றுணர்ந்து தேர்ச்சி பெறுவது நம்பிக்கையான மட்டுமின்றி வளமான எதிர்காலத்தையும் விதைக்கும் என்பது தின்னம் என்றார் மாண்புமிகு குலசேகரன்.

தொடர்ந்து விவரித்த அவர் கல்வித் திட்டப் பட்டதாரிகளைக் காட்டிலும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் பட்டதாரிகள் அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களில் தேர்ச்சி பெற முடியும்.இந்த நன்மை அதிக வேலை வாய்ப்புகளைத் திறக்கும் திறனை கொண்டுள்ளது.மேலும்,கல்வித் திட்டப் பட்டதாரிகளை காட்டிலும் தொழில்நுப்டம் மற்றும் தொழில்திறன் கல்வி சார்ந்தவர்களுக்கு வேலைகளை வழங்க முதலாளிகள் பெரிதும் விரும்புவர் என்றார்.

மாணவர்கள் மட்டுமின்றி வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் தங்களின் வாழ்வியல் தன்மையை நன்நிலைக்கு உயர்த்தவும் இத்துறை பங்காற்றுகிறது.மேலும்,கல்வியில் பின் தங்கிய அல்லது சிறந்த இலக்கை எட்ட முடியாத மாணவர்களை தொழில்திறன் கல்வியில் அவர்களின் எதிர்காலம் அமைய பெற்றோர்களின் ஊக்குவிப்பும் அவர்களுக்கு இதுசார்ந்த புரிதலும் அவசியம் என்கிறார் மாண்புமிகு குலசேகரன்.

அதேவேளையில்,நம்மவர்களிடையே குறிப்பிட்ட ஒருசில தொழில்கள் மீது நல்ல எண்ணம் எழுவதில்லை.குறிப்பாக,சமையல்,நீர் குழாய் பழுதுப்பார்த்தல் உட்பட சிலவற்றை அலட்சியம் செய்வதை நாம் இன்னமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால்,இத்துறைகளில் ஆளுமையும் திறனும் மேலோங்கியிருந்தால் நம்பிக்கையும் வளமும் உயிர்கொண்ட எதிர்காலம் இருப்பதை உணரவே முடியும்.

மேலும்,பள்ளிகளில் கல்வியில் சிறந்த அடைவுநிலையை எட்டாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தொழில் சார்ந்த ஆர்வத்தை கண்டறிந்து பெற்றோர்களிடையே எடுத்துரைத்து அம்மாணவர்களை தொழில்நுட்படம் மற்றும் தொழில்திறன் சார்ந்து பயணிக்க ஆசிரியர்கள் பங்காற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

இறுதியாய்,வாய்ப்புகள் நம்மை தேடி வராது.உருவாக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளை தேடி நாம் தான் செல்ல வேண்டும் என நினைவுறுத்திய துணை அமைச்சர் நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் சார்ந்த வாய்ப்புகள் அதிகமாய் உள்ளது.அதனை நன்முறை பயன்படுத்தி தன் எதிர்காலத்தை மட்டுமின்றி நம் சமூகத்தின் எதிர்காலத்தையும் மேன்மையையும் நனிச் சிறந்த நிலைக்கு உயர்த்த மாணவர்களும் இளம் தலைமுறையினரும் ஆர்வம் காட்ட வேண்டும் என மு.குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles