
ஷா ஆலம், பிப் 14-
அவமதிக்கும் வகையிலான குறுஞ்செய்தியை
ஒருவருக்கு அனுப்பிய குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் காப்பார்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகத்திற்கு
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 வெள்ளி அபராதம் விதித்தது.
மாஜிஸ்திரேட் சாஷா டியானா சப்து முன்னிலையில் தமக்கெதிராக
கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 59 வயதான மாணிக்கவாசகம் ஒப்புக்
கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று தினங்களுக்கு
சிறைத்தண்டனை விதிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படும் அளவுக்குக் கோபம்
உண்டாக்கும் நோக்கில் அவமதிக்கும் வகையிலான செய்தியை
மாணிக்கவாசம் அனுப்பியதாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில்
கூறப்பட்டது.

